NATIONAL

பருவமழை காலத்தில் ஆபத்து நிறைந்த பகுதிகள் மீது எம்.பி.கே.ஜே. தீவிர கண்காணிப்பு

ஷா ஆலம், டிச 23- தற்போது நிலவி வரும் வடகிழக்குப் பருவமழையைக்
கருத்தில் கொண்டு ஆபத்து நிறைந்த பகுதிகள் மீதான கண்காணிப்பைக்
காஜாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே.ஜே.) தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் அண்மையில்
பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவு ஆகியவற்றை படிப்பினையாகக்
கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக
நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

ஆபத்தான நேரங்களில் துரிதமாகச் செயல்படுவதற்கு ஏதுவாக
நகராண்மைக் கழகத்தின் விரைவு நடவடிக்கைக் குழு (பந்தாஸ்) வரும்
ஜனவரி மாதம் வரை தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.

காஜாங் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கை அறையும் கடந்த நவம்பர்
மாதம் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொது
மக்கள் அவசர வேளைகளில் 1-800-88-1144 என்ற எண்களில்
நடவடிக்கையை அறையைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் மேலும்
சொன்னார்.

இந்த பருவநிலை மாற்றத்தின் போது பொது மக்கள் மிகுந்த விழிப்புடன்
இருக்கும் அதேவேளையில் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகளையும்
பின்பற்றி நடக்க வேண்டும் என இணையம் வாயிலாக நடைபெற்ற
நகராண்மைக் கழகக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :