NATIONAL

வெள்ளத்தால் 27,736 பேர் 153 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்

கோத்தா கினபாலு, டிச 25: சபா, சரவாக், பேராக், திரங்கானு, கிளந்தான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இன்னும் 8,666 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 27,736 பேர் 153 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் துறை அமைச்சர் (சபா, சரவாக் மற்றும் சிறப்புப் பணிகள்) டத்தோ அர்மிசான் முகமட் அலி, சிலாங்கூர் மற்றும் பகாங்கில் உள்ள அனைத்து பிபிஎஸ் மையங்களும் மூடப்பட்டுள்ளன என்றார்.

டிசம்பர் 27 ஆம் தேதி வரை பருவமழையின் இரண்டாவது அலை தொடரும் என்று டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஏழாவது தொடர் மழை எச்சரிக்கை அமலில் இருக்கும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரங்கானு, கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி, புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மூன்று இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட அதிக அலைகள் மற்றும் பலத்த காற்றால் தஞ்சோங் அரு பாருவில் உள்ள மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், 27 வீடுகள் சேதமடைந்தன.

– பெர்னாமா


Pengarang :