NATIONAL

இனத் துவேஷக் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பகிராதீர்- பொதுமக்களுக்குப் போலீசார் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 27- சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சினமூட்டும் வகையிலான இனவாதக் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் மறுபடியும் பகிர வேண்டாம் என பொது மக்கள் நினைவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய கருத்துக்கள் பொது அமைதிக்கும் இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரச மலேசியப் போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சஹாடுடின் கூறினார்.

இந்த இனவாதக் கருத்து தொடர்பில் 31 வயதுடைய ஆடவர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டதுடன் அவர் மீது தண்டனைச் சட்டத்தின் 182 வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 33 வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

நஸ்ருள் நசாரி என்பவரின் பேஸ்புக் கணக்கிலிருந்த அந்த இனவாதக் கருத்துகள் நேற்று முதல் மீண்டும் சமூக ஊடங்களில் உலவத் தொடங்கியுள்ளதாகக் கூறிய அவர், உண்மையில் இது பழையப் பதிவாகும் என்றார்.

இந்த பதிவு நேற்று முதல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் வாயிலாகப் பகிரப்பட்டு வருவதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன மற்றும் சமய உணர்வுகளை எழுப்புவதன் மூலம் பொது அமைதிக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்த முயலும் தரப்பினருக்கு எதிராக போலீசார் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடிக்க மாட்டர்கள் என்பதோடு கடுமையான நடவடிக்கைளையும் எடுப்பர் என அவர் எச்சரித்தார்.


Pengarang :