SELANGOR

ஜன.15 தொடங்கி 700 இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை- ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் அறிமுகம்

ஷா ஆலம், டிச 28- சிலாங்கூர் மாநில அரசின் ஏசான் ராக்யாட்
(ஜே.இ.ஆர்.) அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனைத் திட்டம்
அடுத்தாண்டு ஜனவரி மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.)
மேற்காள்ளப்படும் இந்த திட்டம் மாநிலத்தின் 700 இடங்களில் நடத்தப்படும்
என்று அக்கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது
கைரில் முகமது ராஸி கூறினார்.

ஜே.இ.ஆர்.2 என அழைக்கப்படும் இந்த இரண்டாம் கட்ட மலிவு
விற்பனைத் திட்டத்தில் ரொட்டி உள்ளிட்ட புதிய பொருள்களும்
அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும். இந்த
விற்பனையில் வழக்கம் போல் ஆறு அத்தியாவசிய உணவுப்
பொருள்களோடு புதிதாக ரொட்டியும் மலிவான விலையில் விற்கப்படும்
என்று அவர் சிலாங்கூர் கினியிடம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற
நாட்களில் தினசரி 9 இடங்களில் இந்த விற்பனை நடத்தப்படும் என்றும்
அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம்
தொடங்கப்பட்டது முதல் இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட
சிலாங்கூர் மக்கள் பயனடைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கடந்த 14ஆம் தேதி கூறியிருந்தார்.

வரும் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு இந்த மலிவு
விற்பனையை நடத்த மாநில அரசு 1 கோடி வெள்ளி முதல் ஒன்றரை
கோடி வெள்ளி வரை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும்
குறிப்பிட்டார்.


Pengarang :