NATIONAL

சிப்பாங்கில் காணாமல் போன இளம் பெண் ஷா ஆலமில் மீட்பு- பெண் உள்பட மூவர் கைது

சிப்பாங், டிச 28- இளம் பெண் ஒருவர் தாமான் சாலாக் மாஜூவிலுள்ள
“ஹோம் ஸ்தேய்“ எனப்படும் தங்கும் மனையிலிருந்து காணாமல் போனது
தொடர்பில் ஒரு பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷா ஆலம், செக்சன் 13இல் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு
ஒன்றில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனை
நடவடிக்கையில் 19 மற்றும் 18 வயதுடைய ஒரு இளைஞரும் இளம்
பெண்ணும் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது காணாமல் புகார் அளிக்கப்பட்ட
அந்த 13 வயது பெண்ணும் அவ்வீட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக
அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து 9.30 மணியளவில் ஷா ஆலம், செக்சன் 13இல்
உள்ள பேராங்கடி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனை
நடவடிக்கையில் 21 வயதுடைய ஆடவர் ஒரு தடுத்து வைக்கப்பட்டதாக
இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கையின் போது மூன்று கைப்பேசிகள், யமஹா
ஆர்15 ரக மோட்டார் சைக்கிள், இரண்டு சட்டைகள், இரண்டு
கால்சட்டைகள் மற்றும் ஒரு கவசத் தொப்பி ஆகியவை
கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க விசாரணையில்
அந்த பெண் காணாமல் போன சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு
உள்ளதை கைதான இரு இளைஞர்களும் ஒப்புக் கொண்டதாக அவர்
சொன்னார்.

கைதான மூவர் மீதும் எந்த குற்றப்பதிவும் இல்லை எனக் கூறிய அவர்,
இச்சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 361வது பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :