SELANGOR

புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையத்தில் மரங்கள் விழுவதைத் தடுக்க தடுப்புச் சுவர் நிர்மாணிப்பு

ஷா ஆலம், டிச 28- கோல சிலாங்கூரில் உள்ள புக்கிட் மெலாவத்தி சுற்றுலா 
மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்து  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 
தடுப்புச் சுவர் கட்டும் பணியை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 
தொடக்கியுள்ளது.

அந்த மண்சரிவு சம்பவத்தின் விளைவாக சேதமடைந்த கரையை சரிசெய்ய ஐந்து 
மீட்டர் உயர கான்கிரீட் சுவர் எழுப்பும் பணி தற்போது  மேற்கொள்ளப்படும் நிலையில் இப்பணி அடுத்த மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என்று நகராண்மைக் கழகத்தின்  துணைச் செயலாளர் அகமது ஜம்சுரி முஜைனி கூறினார்.

மலைப்பாங்கான அல்லது சரிவானப் பகுதிகளை திட்டமிடுதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு மலைச்சாரல் சார்ந்த விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பொதுப்பணித்துறை  அல்லது பிற ஊராட்சி மன்றங்களின்  சேவையைத் தாங்கள் கோரவுள்ளதாக  அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
மலைப் பகுதியில்  பாறைகள் ஊடே வளரும் மரங்கள் வலுவாக வேர் பிடிக்க முடியாத காரணத்தால் மரங்கள் சாய்வது நகராண்மைக் கழக நிலவடிவமைப்புத் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிலச் சரிவு சீரமைப்பு பணிகளுக்காக புக்கிட் மெலாவத்தி சுற்றுலா மையம்  நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

Pengarang :