HEALTHNATIONAL

மலேசியாவில் மூளையை உண்ணும் நைக்லிரியா ஃபோவ்லரி நோய்ப் பரவல் இல்லை- விழிப்புடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், டிச 29- மலேசியாவில் மூளையை உண்ணும் நைக்லிரியா ஃபோவ்லரி நோய்த் தொற்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும், பொது மக்கள் எச்சரிக்கையைக் கடைபிடிக்கும் அதேவேளையில் நன்னீர் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அமீபா காணக்கூடிய ஏரிகள் அல்லது குளங்களின் அடிப்பகுதியில் உள்ள வண்டல் மண்ணைத் தோண்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி பொது மக்களை சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

நாசிக் குழாய்க்குள் நேரடியாக நுழையக்கூடிய இந்த அமீபாவினால் பாதிக்கப்படுவதை தவிர்க்க நீரில் நீந்துவது அல்லது முக்குளிப்பது போன்ற செயல்களைத் தவிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நீர் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டப் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட நீரில் சோப்பு கொண்டு உடலைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு தண்ணீர் தொடர்பான பணிகளைச் செய்தப் பின்னர் காய்ச்சல், தலைவலி, வாந்தி அல்லது கழுத்து விறைப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரைக் காணும்படியும் அவர் கூறினார்.

நெக்லிரியா ஃபோவ்லரி என்பது தெர்மோபிலிக் அமீபா அல்லது புரோட்டோசாவன் ஒற்றைச் செல் உயிரினமாகும். இது உலகம் முழுவதும் குறிப்பாக ஏரிகள், குளங்கள், நிலத்தடி நீர், சுடுநீர் ஊற்று உள்ளிட்ட இடங்களில் பரந்து காணப்படுகிறது.  இந்த அமீபா நோயினால் மூளைத் தொற்று ஏற்படலாம்.இது மூளையை உண்ணும் அமீபா எனவும் அழைக்கப்படுகிறது.

நன்னீர் தொடர்பான நடவடிக்கைகளின் போது நாசிக் குழாய் வழியாக உடலில் நுழையும் இந்த அமீபா, முதுகுத் தண்டு தொற்று மூலம் மூளைக்குச் சேதம் விளைவிக்கும்.


Pengarang :