NATIONAL

போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று இந்திய ஆடவர்களுக்கு மரண தண்டனை

ஷா ஆலம், ஜன 4- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரவாங்கில் உள்ள
மாட்டுத் தொழுவத்தில் 584.1 கிராம் ஹெரோயின் மற்றும்
மோனோஸின்தெல்மோர்பைன்ஸ் போதைப் பொருளைக் கடத்திய
குற்றத்திற்காக மூன்று இந்திய ஆடவர்களுக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம்
இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்கு
எதிராக நியாயமான சந்தேகங்களை எதிர்த்தரப்பு எழுப்பத் தவறியதைத்
தொடர்ந்து சி. பீட்டர் யோசுதாஸ் (வயது 55), வி.காசிநாதன் (வயது 43)
மற்றும் கே.நாகராஜ் (வயது 57) ஆகிய மூவருக்கும் நீதிபதி டத்தோ
அப்துல் ஹலிம் அமான் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அளித்த சாட்சியங்கள் அனைத்தும்
வெறுமனே மறுக்கும் விதமாகவும் மறு யோசனைக்கு உட்பட்டதாகவும்
இருந்ததோடு அவற்றை ஆதரிக்கும் வகையில் வலுவான
ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில்
கூறினார்.

போதைப் பொருளை பதனீடு செய்ததன் மூலம் அவற்றுடன் அவர்கள்
நேரடித் தொடர்பைக் கொண்டிந்ததோடு அந்த தொழுவத்தில் போதைப்
பொருள் இருப்பதை அவர்கள் அறிந்தும் இருந்தனர் என்று அவர்
தெரிவித்தார்.

இதே குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த மற்றொரு நபரான எம்.
ராதாகிருஷ்ணன் (வயது 52) தடுப்புக் காவலில் இருந்த போது
மரணமடைந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யவும்
நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பிற்பகல் 12.40
மணியளவில் ரவாங்கிலுள்ள மாட்டுத் தொழுவம் ஒன்றில் 432.6 கிராம்
ஹெரோயின் மற்றும் மோனோஸின்தெல்மோர்பைன்ஸ் போதைப்
பொருளைக் கடத்தியதாக இன்னும் தலைமறைவாக இருந்து வரும் எஸ்.பாலகுகன் (வயது 50) என்பவருடன் அம்மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை வழங்கவகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி(1)(ஏ) பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 39பி(2) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சார்பில் 22 சாட்சிகளும் எதிர்த்தரப்பு சார்பில்
மூன்று சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.

அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் டத்தின் ஜூராய்னி அப்துல்
ரசாக் இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றச்சாட்டப்பட்ட மூவரின்
சார்பிலும் வழக்கறிஞர் நோர்மான் முகமது நாசீர் ஆஜரானார்.


Pengarang :