NATIONAL

சீனாவில் இருந்து சபாவிற்கு வரும் பயணிகள் கோவிட்-19க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

கோத்தா கினபாலு, ஜன 5 – இந்த ஞாயிற்றுக்கிழமை முதல், சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் சபாவிற்குள் நுழைவதற்கு முன்பு அந்தந்த நாடுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் படி கோவிட்-19 க்கு எதிராக முழுமையான தடுப்பூசி போட வேண்டும்.

மாநில உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டத்தோஸ்ரீ மசிடி மஞ்சுன் கூறுகையில், பயணிகள் சபாவிற்குப் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் அவர்களின் நெகடிவ் கோவிட்-19 சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

“இது மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்று சபாவின் கோவிட் -19 செய்தித் தொடர்பாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து சபாவிற்கு வரும் அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கேனரைப் பயன்படுத்தி சோதனைக்கு உட்படுததப்படுவர் என்றும், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளதாக மசிடி கூறினார்.

“கோவிட்-19 அறிகுறிகளைக் கொண்ட பயணிகள் ஆர்டிகே (RTK) ஆன்திஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சபாவில் 12 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 138 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 10 நோயாளிகளுக்குத் தொடர் கவனிப்பு தேவை, மேலும் 23 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :