SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் டிசம்பர் முதல் அமல்

ஷா ஆலம் ஜன 5- ஷா ஆலம் வெள்ள நடவடிக்கைத் திட்டத்தின் கீழ்
(சாசுட்) நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம் மாநகர்
மன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, செக்சன் 32, கம்போங் புக்கிட் நாகாவில் இத்திட்டம் துரிதமாக
மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர்
ஃபுவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

செக்சன் 25 தாமான் ஸ்ரீ மூடா, செக்சன் யு1 தாமான் மெஸ்ரா மற்றும்
செக்சன் 13 ஆகியவை வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்
இதர இடங்களாகும் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் நான்கு பணி நியமனக் கடிதங்களை வெளியிட்டுள்ளதோடு
அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டில்
மேலும் ஒரு பணி நியமனக் கடிதத்தை வெளியிடுவோம் என அவர்
சொன்னார்.

எனினும், இதன் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு இன்னும்
காலம் கனியவில்லை. இந்த புதியத் திட்டம் வரும் ஏப்ரல் மாதம்
தொடங்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டு
தவணைக்கான மாநகர் மன்ற உறுப்பினர்கள் பதவியேற்புச் சடங்கிற்குத்
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கிலான குறுகிய கால
மற்றும் பல கட்ட திட்டங்களை உள்ளடக்கிய இந்த சாசுட் முன்னெடுப்பு
தொடர்பான அறிவிப்பை அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் இஷாம் ஹஷிம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியிட்டிருந்தார்.

ஒருங்கிணைந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தை அமல்படுத்தும் நாட்டின்
முதல் ஊராட்சி மன்றமாக ஷா ஆலம் மாநகர் மன்றம் விளங்குவதாகவும்
அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :