SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தில் 4 இந்திய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 5- ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
2023ஆம் ஆண்டு தவணைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்களில் 4
இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாநகர் மன்றத்தின் நீண்ட கால உறுப்பினரான வீ.பாப்பாராய்டு
அப்பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்ட வேளையில் நடப்பு கவுன்சிலரான
எஸ்.காந்திமதிக்கு இந்த தவணையிலும் வாய்ப்பு.

பி.கே.ஆர். கட்சியின் பிரதிநிதிகளாகக் கடந்த தவணையில் பதவி வகித்த எஸ்.குமரவேல் மற்றும் எஸ்.பி. சரவணனுக்குப் பதிலாக என்.ராமு மற்றும் எம்.முருகையா
ஆகியோர் இம்முறை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தவணைக்கான மாநகர் மன்ற உறுப்பினர்களின் பதவி பிரமாணச்
சடங்கு ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் டேவான் பெர்பண்டாரானில்
நேற்று டத்தோ பண்டார் டாக்டர் நோர் புவாட் அப்துல் ஹமிட்
முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மொத்தம் 23 உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக்
கொண்டனர். இவர்கள் அனைவரும் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி
தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை இப்பதவியை வகிப்பர்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய டத்தோ பண்டார்,
இத்தவணைக்கு நியமனம் பெற்ற அனைத்து மாநகர் மன்ற
உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றும் அதே
வேளையில் மாநகர் மன்றத்தின் சேவைத் திறன் மேம்பாட்டிற்கு
ஆக்ககரமான கருத்துகளையும் வெளியிடுவர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகச்
சொன்னார்.

கடந்த 2021/2022 தவணையின் போது முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்பு
உணர்வுடனும் பணியை ஆற்றிய மாநகர் மன்ற உறுப்பினர்களுக்கும் அவர்
நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :