SELANGOR

சிலாங்கூர் அரசின் அடிப்படை மருத்துவ உதவித் திட்டம்- டிசம்பர் வரை 83,537 பேர் பதிவு

ஷா ஆலம்,  ஜன 5- மருத்துவ சிகிச்சைக்காக 500 வெள்ளி வரை உதவித்
தொகை பெற வகை செய்யும் இல்திஸாம் சிலாங்கூர் சிஹாட்
(ஐ.எஸ்.எஸ்.) திட்டத்திற்குக் கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி வரை
மாநிலத்தைச் சேர்ந்த 85,537 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஐ.எஸ்.எஸ். திட்டத்தின் கீழ் 5,000 வெள்ளிக்கான காப்புறுதியும் 1,000
வெள்ளி மரணச் சகாய நிதியும் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

அடிப்படை மருத்துவ உதவி மற்றும் காப்புறுதி பாதுகாப்பைப் பெறுவதற்கு
ஏதுவாக இந்த ஐ.எஸ்.எஸ். திட்டத்திற்கு 100,000 பேரை பதிவு செய்ய
திட்டமிட்டுளோம். இறைவன் அருளால் கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி
வரை 83,537 பேர் இத்திட்டத்திற்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.

அவர்களுக்கு அடிப்படை மருத்துவச் சிகிச்சைக்காக 500 வெள்ளியும் 5,000
வெள்ளிக்கான மருத்துவக் காப்புறுதியும் வழங்கப்படும். இதுதவிர மரணச்
சகாய நிதியாக 1,000 வெள்ளி வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் அடிப்படை மருத்துவ வசதி,
தடுப்பூசி மற்றும் காப்புறுதி பாதுகாப்பைப் பெறும் நோக்கில் இத்திட்டம
அமல்படுத்தப்படுகிறது என அவர் சொன்னார்.

இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதிகள் வருமாறு-
• குடும்பங்களுக்கான பிரிவு- குடும்ப வருமானம் மாதம் 3,000 வெள்ளிக்கும்
குறைவாகவும் 21 வயதுக்கும் குறைவான பிள்ளைகளையும் (மாணவர்கள்)
கொண்டிருக்க வேண்டும்.
• தனி நபர் பிரிவு- குடும்ப வருமானம் 2,000 வெள்ளிக்கும் குறைவாகவும்
மாற்றுத் திறனாளிகள்/மூத்த குடிமக்களுக்கான அட்டையை (65 வயதுக்கும்
மேல்) கொண்டிருப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும்

• இதர நிபந்தனைகள்- விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக
சிலாங்கூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மேல் விபரங்களுக்கு http://pedulisihat.com/pendaftaran.html எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.


Pengarang :