NATIONAL

முகாமிடும் நடவடிக்கை மீதான எஸ்.ஒ.பி. விதிகள் குறித்து மாநில அரசு அடுத்த வாரம் விவாதிக்கும்

காஜாங், ஜன 5- ஆடம்பர பொழுது போக்கு முகாம் உள்ளிட்ட அனைத்து
வகையான முகாமிடும் நடவடிக்கைகளுக்கான சீரான செயலாக்க
நடைமுறை (எஸ்.ஒ.பி.) குறித்து மாநில அரசு அடுத்த வாரம்
விவாதிக்கவுள்ளது.

மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும் ஊராட்சி மன்றங்கள்
உள்பட பல்வேறு தரப்பினரை இந்த விவாதம் உள்ளடக்கியிருக்கும் என்று
சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்
கூறினார்.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் அல்லது வழக்கமான இடங்களில்
முகாமிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான எஸ்.ஒ.பி.
விதிமுறைகள் குறித்து மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு மற்றும்
ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கிய தரப்பிருடன் கலந்துரையாடல்
நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இத்தகைய பொழுது போக்கு முகாம் நடவடிக்கைகள் அதிக லாபம்
ஈட்டக்கூடிய ஒரு வணிகமாக விளங்குவதால் இந்நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு பெர்மிட்டுகளை பெறுவதோடு மட்டுமின்றி குறிப்பட்ட
தொகையைக் கட்டணமாகச் செலுத்துவது தொடர்பான அம்சங்களையும்
அந்த எஸ்.ஒ.பி. விதிமுறை கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

இன்று பண்டார் மக்கோத்தா செராசில் உள்ள குவாரியைப் பார்வையிட்டப்
பின்னர் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இதனைக் கூறினார்.

மாநிலத்தில் முகாமிடும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி
உருவாக்கப்படுவதை இந்த எஸ்.ஒ.பி. விதிமுறை உறுதி செய்யும் என
அவர் குறிப்பிட்டார். தற்போது முகாமிடும் நடவடிக்கையை மேற்கொள்வோருக்கு எஸ்.ஒ.பி. விதிகள் அல்லது வழிகாட்டி எதுவும் கிடையாது. தனியார் நிலத்தில்

முகாம்களை அமைத்து செயல்படுகின்றனர். இதன் மூலம் லாபம்
கிடைக்கும் போது அது வணிகமாகக் கருதப்படுகிறது என்றார் அவர்.

கடந்த மாதம் 16ஆம் தேதி கெந்திங்-பத்தாங் காலி சாலையில் ஏற்பட்ட
நிலச்சரிவில் அங்கு முகாமிட்டு தங்கியிருந்த 92 பேர் பாதிக்கப்பட்டனர்
அவர்களில் 31 பேர் உயிரிழந்த வேளையில் மேலும் 61 பேர்
உயிர்த்தப்பினர்.


Pengarang :