SELANGOR

அத்தியாவசியப் பொருள் சந்தையை நிலைப்படுத்துவதற்கு மலிவு விற்பனை தொடரப்படும்

ஷா ஆலம், ஜன 11- நிச்சயமற்ற நிலையில் காணப்படும் அத்தியாவசியப்
பொருள் சந்தையை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டாம் கட்ட ஏசான்
ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டம் அடுத்த வாரம் முதல்
மேற்கொள்ளப்படும்.

இந்த மலிவு விற்பனை ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை
வாரியம் மற்றும் கோஹிஜ்ரா எனப்படும் கோப்ராசி வர்கா ஹிஜ்ரா
சிலாங்கூர் கூட்டறவுக் கழகம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன்
இம்மாதம் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சந்தையில் பொருள் விலையையும் விநியோகத்தையும் நிலைப்படுத்த
கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இந்த ஏசான் ராக்யாட் மலிவு
விற்பனைத் திட்டத்தை வரும் மார்ச் மாதம் வரை நடத்தவுள்ளோம் என
அவர் சொன்னார்.

இந்த முறை நடத்தப்படும் மலிவு விற்பனையில் காணப்படும் வித்தியாசம்
என்னவென்றால் இந்நோக்கத்திற்காக ஃபாமா மற்றும் கோஹிஜ்ராவுடன்
கைக்கோர்த்துள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் நடைபெறும்
விற்பனையிலும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார் அவர்.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக்
மண்டபத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான முக்கிய உரையை ஆற்றிய
போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விரு தரப்பினருடனான ஒத்துழைப்பின் வாயிலாக மேலும் அதிகமான
பொருள்களை நியாயமான விலையில் விற்பதற்குரிய வாய்ப்பு சிலாங்கூர்
மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்குக் கிட்டும் என்றும் அவர்
சொன்னார்.


Pengarang :