SELANGOR

ஷா ஆலமில் வெ.12.5 லட்சம் செலவில் சிறப்புக் குழந்தைகளுக்கான பாலர் பள்ளி நிர்மாணிப்பு

ஷா ஆலம், ஜன 13- ஷா ஆலம், செக்சன் 7இல் அனிஸ் எனப்படும்
சிறப்புக் குழந்தைகளுக்கான பாலர் பள்ளி 12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி
செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக டத்தோ பண்டார் டாக்டர் நோர்
புவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

அந்த ஒரு மாடி கட்டிடம் பி.கே.என்.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில
மேம்பாட்டுக் கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு அதனை வழிநடத்தும்
பொறுப்பு ஷா ஆலம் மாநகர் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்
சொன்னார்.

இந்த அனிஸ் பாலர் பள்ளியை கூட்டாக நிர்வகிப்பது தொடர்பான
பரிந்துரையை அனிஸ் இலாகாவிடமிருந்து தாங்கள் கடந்த 2021ஆம்
ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி பெற்றதாக அவர் தெரிவித்தார்.

மற்ற பிள்ளைகளைப் போலவே குறைபாடுடைய இந்த சிறப்புக்
குழந்தைகளும் கல்வி மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்ற
உயரிய நோக்கத்தில் செயல்படும் அனிஸ் இலாகாவுக்கு உதவும் நோக்கில்
இந்த பரிந்துரையைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற அனிஸ் பாலர் பள்ளியின் திறப்பு விழாவில்
உரையாற்றிய போது டத்தோ பண்டார் இவ்வாறு தெரிவித்தார். மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த பாலர் பள்ளியை
அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கல்வி வசதியை ஏற்படுத்தித்
தருவதற்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் முன்னெடுத்துள்ள இந்த திட்ம்
மாநிலத்திலுள்ள மற்ற ஊராட்சி மன்றங்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக
விளங்குவதாகவும் டாக்டர் நோர் புவாட் தெரிவித்தார்.


Pengarang :