SELANGOR

சிலாங்கூர் வேளாண் சாதனையாளர் போட்டிக்கான விண்ணப்ப நாள் ஜனவரி 18 ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஷா ஆலம், ஜன 13- வரும் திங்கட்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டு சிலாங்கூர் வேளாண் சாதனையாளர்  தேர்வுக்கான விண்ணப்ப தினம் தற்போது இம்மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வேளாண் திட்டங்களை சொந்தமாக மேற்கொண்டு வரும் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த சாதனை விருதுக்கு விண்ணப்பம் செய்பவர் அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருபவராகவும் மலேசிய நிறுவன ஆணையத்தின் சான்றிதழைக் கொண்டவராகவும் இருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், விண்ணப்பதாரர்கள் குறைந்தது 12 மாதங்களுக்கு முறையான கணக்கறிக்கையை கொண்டிருக்க வேண்டும். நிறுவனங்கள் அல்லது சங்கங்களாக இருப்பின், தங்கள் நிறுவனம் அல்லது அமைப்பின் முழுமையான விபரக் குறிப்பை அனுப்ப வேண்டும் என்று அவர் தனது பேஸ்புக் பதில் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருள் உற்பத்தி மையமாகச் சிலாங்கூர் விளங்குவதை உறுதி செய்யும் நோக்கிலும் வேளாண் துறையில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த வேளாண் சாதனையாளர் விருதளிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இஷாம் கடந்த மாதம் 13ஆம் தேதி கூறியிருந்தார்.

மொத்தம் பத்தாயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் விவசாய உபகரணங்களை பரிசாக வழங்கும் இந்த போட்டி கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர் தொழில், விவசாயம் சார்ந்த தொழில் துறை, வேளாண் சுற்றுலா ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.


Pengarang :