NATIONAL

முறையான ஆவணங்கள் இன்றி மலேசியப் படகைச் செலுத்திய இந்தோனேசியர்கள் கைது

ஷா ஆலம், ஜன 16- முறையான ஆவணங்கள் இன்றி “சி“ பிரிவைச் சேர்ந்த மலேசிய மீன் பிடி படகில் வேலை செய்த ஐந்து இந்தோனேசியர்களை சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவன அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுங்கை பெசார் கடல் பகுதியில் நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில கடல்சார் அமலாக்க நிறுவன இயக்குநர் கேப்டன் மெரிடிம் வி.சிவக்குமார் கூறினார்.

“ஓப் ஏசான்“ நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரோந்து படகில் சோதனை மேற்கொண்டிருந்த அமலாக்க அதிகாரிகள்  சுங்கை பெசார் கடலோரத்திலிருந்து 5.2 கடல் மைல் தொலைவில் அந்த மீன்பிடிப் படகைத தடுத்து நிறுத்தியதாக அவர் சொன்னார்.

அந்த படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆடவர் ஒருவர் படகை செலுத்திய வேளையில் மேலும் நால்வர் கடலோடிகளாகப்  பணியாற்றியது தெரிய வந்தது. 31 முதல் 54 வயது வரையிலான அந்த ஐவரும் செல்லத்தக்க ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மலேசிய மீன்வளத் துறையின் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி அந்நிய நாட்டினர் படகை கையாள்வதற்கு அதன் உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளது சோதனையின் மூலம் தெரியவந்தது. மேலும் அந்த படகில் 200 கிலோ மீன்களும் பல்வேறு மீன்பிடி சாதனங்களும் இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

அந்த மீனவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் நான்கு மாதம் முதல் ஈராண்டு வரை வேலை செய்து வந்துள்ளனர். வேலைக்குச் செல்லும் தினங்களில் படகைச் செலுத்துபவருக்கு 100 வெள்ளி மற்றும் இதர கடலோடிகளுக்கு 50 வெள்ளி என்ற அடிப்படையில் தினசரி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்று சிவக்குமார் சொன்னார்.

கைப்பற்றப்பட்ட படகும் அதன் பணியாளர்களும் பூலாவ் இண்டா கடல் போலீஸ் படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டு மேல் நடவடிக்கைக்காக மலேசிய கடல்சார் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர்  என்றார் அவர்


Pengarang :