SELANGOR

இலவசப் பஸ் சேவையில் அந்நியர்களுக்குக் கட்டணம்- அது ஒடுக்குமுறை அல்ல – பஸ் நிறுவனம் விளக்கம்

ஷா ஆலம், ஜன 16- பெட்டாலிங் ஜெயாவில் மேற்கொள்ளப்படும் பி.ஜே.
சிட்டி பஸின்  இலவசச் சேவையில் அந்நிய நாட்டினருக்கு விதிக்கப்படும்
90 காசு கட்டணம் அத்தரப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறையோ அல்லது
புறக்கணிப்போ கிடையாது என எஸ்.எஸ்.டி.யு. இன்னோவேஷன்ஸ் சென்.
பெர்ஹாட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

சிலாங்கூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதைப் பிரதான நோக்கமாக
கொண்டு ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப் பஸ் சேவை தொடங்கப்பட்டதாக
அந்நிறுவனம் கூறியது.

வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்துவதில் உள்நாட்டினருக்கும்
வெளிநாட்டிருக்கும் உள்ள சலுகை வேறுபாட்டைக் காட்டுவதற்காக
எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கையாக
இந்த கட்டண அமலாக்கம் அமைந்துள்ளது என்று அந்நிறுவனம் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தது.

மருத்துவமனைகள் அல்லது அரசாங்கக் கிளினிக்குகளில் விதிக்கப்படும்
கட்டணங்களை இவ்விவகாரத்தில் ஒரு ஒப்பீடாகக் கொள்ளலாம். அங்கு
அந்நிய நாட்டினருக்கு வேறு மாதிரியான கட்டணம்
விதிக்கப்படுகிறது.

பி.ஜே. பஸ்களில் அந்நிய நாட்டினருக்குக் கட்டணம் விதிக்கும் திட்டத்தைச்
சிலாங்கூர் அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அரசு சாரா அமைப்பு
கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்த ஊடகச் செய்தி தொடர்பில்
அந்நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

மாநிலத்திலுள்ள இதர சில ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து கடந்த
2021ஆம் ஆண்டு முதல் அந்நிய நாட்டினருக்கு 90 காசு கட்டணம்
விதிக்கும் நடைமுறையை பி.ஜே. சிட்டி பஸ் அமல்படுத்தி வருகிறது.

பராமரிப்பு செலவினங்களுக்காகவும் இந்த சேவையை நீண்ட கால
அடிப்படையில் மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை ஈடு
செய்வதற்காகவும் இந்த கட்டண விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மக்களுக்கு இலவசச் சேவையை வழங்கும் இந்த ஸ்மார்ட்
சிலாங்கூர் திட்டத்தை மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்
தருவதற்காக மாநில அரச உருவாக்கியுள்ள தனித்துவமிக்க திட்டமாகப்
பார்க்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் கூறியது.


Pengarang :