SELANGOR

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாகனமில்லாத் தினத்தில் 3,000 பேர் பங்கேற்றனர்

ஷா ஆலம், ஜன 16- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று
இங்கு நடைபெற்ற வாகனமில்லா தினத்தில் சுமார் மூவாயிரம் பேர்
கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல் 477 பேருக்கு மாநகர் மன்றம்
இலவச டி-சட்டைகளை வழங்கி சிறப்பித்தது. இந்த வாகனமில்லாத் தின
திட்டத்தின் ஏழாம் ஆண்டு நிறைவையொட்டி இந்த டி-சட்டைகள்
வழங்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் பொது உறவு பிரிவு தலைவர்
ஷாரின் அகமது கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் எங்களுடன் இணைந்திருக்கும்
விசுவாசமிக்க வருகையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் மாநகர்
மன்றம் இந்த டி-சட்டைகளை வழங்கியது என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது
ஊக்கமூட்டும் வகையில் உள்ளது. இந்த நிகழ்வின் வெற்றிக்கு
உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த வாகனமில்லா தினக்
கொண்டாட்டத்தின் சிறப்பு அங்கமாகச் சீனப் புத்தாண்டை முன்னிட்டு
சிங்க நடனமும் இடம் பெற்றது.

இது தவிர இங்கு நடைபெற்ற “ஈக்கோ ஃபிரி மார்க்கெட்“ எனும் நிகழ்வில்
40 பேர் பங்கு கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் தங்களிடம்
உள்ள மறுசுழற்சிப் பொருள்களை இங்கு ஒப்படைத்தால் அவர்களுக்குக்
கூப்பன்கள் வழங்கப்படும். அந்த கூப்பன்களைப் பயன்படுத்தி “ஈக்கோ ஃபிரி
மார்க்கெட்டில்“ பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.


Pengarang :