NATIONAL

சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் 3.8 மில்லியன் வாகனங்களால் பயன்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜன 16: இந்த வார இறுதியில் தொடங்கும் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் 3.8 மில்லியன் வாகனங்களால் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறுகையில், இந்த காலகட்டம் முழுவதும் சுமூகமான போக்குவரத்து மற்றும் பயனர் பாதுகாப்பை உறுதி செய்ய, மலேசிய நெடுஞ்சாலைகள் வாரியம் (LLM) பல முயற்சிகளை எடுத்துள்ளது.

அவற்றில், கடந்த வெள்ளிக்கிழமை “Op Selamat திட்டம்“ ராயல் மலேசியன் காவல்துறையின் (PDRM) ஒத்துழைப்போடு தொடங்கியது. மேலும், “Op Bersepadu“ சாலைப் போக்குவரத்துத் துறையின் ஒத்துழைப்போடு நாளை தொடங்கப்படும்.

ரோந்து உறுப்பினர்கள், டோல் பிளாசாவில் உள்ள அதிகாரிகள், RELA (மலேசிய தன்னார்வ துறை) உறுப்பினர்கள் மற்றும் அவசரகாலப் பதிலளிப்புக் குழுவின் (ERT) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 24 மணி சேவைக்காக அதிகரிக்கப்படும்.

“சுங்கச்சாவடியில் நெரிசலைக் குறைக்கப் பாதைகளை அதிகரிப்பதுடன், கட்டண வசூல் முறையும் சிறப்பாகச் செயல்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்,“ என்றார்.

மேலும், விபத்து ஏற்பட்டால் நெடுஞ்சாலை பயன்படுத்துபவர்களுக்கு உதவும் வகையில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீட்பு இயந்திரங்களும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன என்றார்.

போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை பாதை மூடல் சம்பந்தப்பட்ட கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள் நிறுத்தப்படும்.

நாளை தொடங்கவுள்ள சாலை பாதுகாப்பு பிரச்சாரம் வெற்றிபெற செய்ய போக்குவரத்து அமைச்சகத்துடன் பொதுப்பணித்துறை அமைச்சகமும் ஒத்துழைக்கும்,” என்றார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் மொத்தம் 402,626 சாலை விபத்துகளில் 4,379 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“இது 2021ஆம் ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது 36 சதவீதம் அல்லது 147,094 விபத்து சம்பவங்கள் அதிகமாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

– பெர்னாமா


Pengarang :