NATIONAL

பத்தாங் காலியில் மலைச்சாரலை வலுப்படுத்தக் கூடுதலாக வெ.2.1 கோடி ஒதுக்கீடு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜன 16- பத்தாங் காலி, ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம்
பொழுதுபோக்கு முகாம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து
அப்பகுதியில் உள்ள மலைச்சாரலை வலுப்படுத்தும் பணிக்காக மாநில
அரசு கூடுதலாக 2 கோடியே 11 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

மாநில ஆட்சிக்குழுவிடம் பொதுப்பணித்துறை சமர்பித்த அறிக்கையின்
அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மலைச்சாரலை வலுப்படுத்தும்
பணிக்காக மேலும் 2 கோடியே 11 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ய
மாநில அரசு இணக்கம் தெரிவித்துள்ளது என்று அவர் சொன்னார்.

மேலும், பொழுது போக்கு முகாமிடும் நடவடிக்கை மற்றும் வர்த்தகம்
தொடர்பில் வழிகாட்டியைத் தயாரிப்பதில் மாநில அரசு ஊராட்சி
மன்றங்களுடன் ஒத்துழைப்பு நல்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முகாம்களில் பொழுது போக்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்
சிலாங்கூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டி
தயாரிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி அந்த பொழுதுபோக்கு முகாம்
பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 பேர் உயிரிழந்ததோடு மேலும் 61 பேர்
காப்பாற்றப்பட்டனர்.


Pengarang :