NATIONAL

தம்பதியர் உள்பட மூவர் கைது- வெ.11 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ஜோர்ஜ் டவுன், ஜன 16- பினாங்கு போலீசாரின் அதிரடி சோதனை
நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று
முறியடிக்கப்பட்டது.

இம்மாதம் 13ஆம் தேதி கப்பளா பாத்தாஸ், பெனாகாவில்
மேற்கொள்ளப்பட்ட இரு சோதனை நடவடிக்கைகளில் 11 லட்சத்து 30
ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 451 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டதோடு கணவன், மனைவி ஆகியோருடன் வணிகர் ஒவரும்
செய்யப்பட்டார்.

பொது மக்கள் கொடுத்த தகவல் மற்றும் வேவு நடவடிக்கையின் பயனாக
இரவு மணி 7.30 அளவில் பெனாகா, ஜாலான் பெண்டஹாராவில் உள்ள
வீடொன்றில் மாநில குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் சோதனை
மேற்கொண்டதாகப் பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமது
சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

அந்த வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருந்த
முன்னாள் போலீஸ்காரரான 33 வயது ஆடவரிடம் நடத்தப்பட்ட
சோதனையில் 10 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 25,000 வெள்ளி
மதிப்புள்ள 10.2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக இங்கு இன்று
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் 33
அவ்வாடவரின் மனைவியைக் கைது செய்ததோடு அங்கிருந்து 11 லட்சம்
வெள்ளி மதிப்புள்ள 441 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர் என்றார் அவர்.

இத்தம்பதியரிடமிருந்து கிடைத்தத் தகவலின் பேரில் அதே பகுதியில் உள்ள
மற்றொரு வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு
போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனினும் அங்கிருந்த
42 வயதுடய வர்த்தகர் ஒருவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்
என அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய
மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952ஆம் ஆண்டு அபாயகர
போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :