NATIONAL

கோவிட்-19 நோயைவிட சாலை விபத்துகளில் உயிரிழப்போர் அதிகம்- அமைச்சர் அந்தோணி லோக் வேதனை

ஷா ஆலம், ஜன 17- சாலை விபத்துகள் காரணமாக கடந்தாண்டு
செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 4,379 பேர் உயிரிழந்துள்ளதாகப்
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியு ஃபோக் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான
காலக்கட்டத்தில் நாடு முழுவதும் 370,28 சாலை விபத்துகளும் 4,539
மரணங்களும் நிகழ்ந்துள்ளதை அரச மலேசியப் போலீஸ் படையின்
தரவுகள் காட்டுவதாக அவர் சொன்னார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 402,626
விபத்துகள் பதிவு செய்யப்பட்டன. அவ்விபத்துகளில் 4,379 பேர்
உயிரிழந்தனர் என்று 2023ஆம ஆண்டு சீனப்புத்தாண்டை முன்னிட்டு
டிங்கில் வடக்கு தடத்தின் ஓய்வு பகுதியில் தேசிய நிலையிலான சாலை
பாதுகாப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர்
தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர்
நந்தா லிங்கியும் கலந்து கொண்டார்.

கடந்தாண்டு சீனப்புத்தாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ்
செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்க காலத்தில் மட்டும் 108 மரணங்களை
உட்படுத்திய 11,325 விபத்துகள் நிகழ்ந்ததாக அவர் அந்தோணி லோக்
தெரிவித்தார்.

நாட்டில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பெருமிதம்
அளிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் சொன்னார்.
சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடு பெருமை கொள்ளும்
அளவை இன்னும் எட்டவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று பரவல்
காலத்தில் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்துகளின் காரணமாக
உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இது உண்மையில் வேதனையளிக்கும் நிலவரமாகும். கோவிட்-19
விஷயத்தில் பொது மக்களிடம் காணப்பட்ட அச்சம் மற்றும் விழிப்புணர்வு
சாலை விபத்து விஷயத்தில் காணப்படாதது கவலையளிப்பதாக உள்ளது
என்றார் அவர்.


Pengarang :