SELANGOR

புக்கிட் மெலாவத்தியில் மலிவு விற்பனை- 45 நிமிடங்களில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

கோல சிலாங்கூர், ஜன 18- இன்று இங்கு நடைபெற்ற புக்கிட் மெலாவத்தி
தொகுதி நிலையிலான ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் 45
நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

இந்த விற்பனை தொடர்பில் முன்கூட்டியே பொது மக்களுக்குத்
தெரிவிக்கப்பட்டு விட்டதால் இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு
கிடைத்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
(பி.கே.பி.எஸ்.) சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி ஃபாத்திமா முகமது
ஜோஹாரி கூறினார்.

வழக்கமாக காலை 10.00 மணிக்குதான் இந்த விற்பனையைத்
தொடக்குவோம். ஆனால் பொது மக்களை நீண்ட நேரம் வரிசையில் காக்க
வைக்க வேண்டாம் என்பதற்காக 15 நிமிடங்கள் முன்னதாகவே
விற்பனையைத் தொடக்கி விட்டோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள கம்போங் அசாம் ஜாவா தோக் ரம்லி உணவகத்தில் நடைபெற்ற
இந்த மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

பொருள்கள் காணாமல் போவதைத் தடுப்பதற்கும் வாடிக்கையாளர்கள்
கட்டணத்தை விரைவாக செலுத்துவதற்கும் ஏதுவாக பொருள் கொள்முதல்
இடத்தையும் கட்டணம் செலுத்தும் இடத்தையும் தாங்கள் தனித் தனியாக
பிரித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனை இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கி
மார்ச் மாதம் வரை தினசரி 9 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும்.
கடந்த முறை மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள 700 இடங்களில்
நடத்தப்பட்ட மலிவு விற்பனையில் இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர்
பயனடைந்தனர்.


Pengarang :