NATIONAL

காணாமல் போன இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்

குவாந்தான், ஜன. 19: கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு மீனவர்கள் நேற்று தெலுக் ஜுவாரா, புலாவ் தியோமான், ரோம்பினில் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சியா ஸ்வீ க்வாங், 49, மற்றும் சுல்ஃபாமி இசுடின் கான் அப்துல்லா, 45, ஆகியோர் பிற்பகல் 2.30 மணியளவில் பலவீனமான நிலையில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று மலேசியக் கடல்சார் அமலாக்க முகமையின் (APMM) இயக்குனர் கூறினார்.

அவர்களது முதலாளிகளின் தகவல் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இரண்டு ரிசார்ட் தொழிலாளர்களும் தெலுக் ஜுராவிலிருந்து பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சம்பவத்தன்று பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை. மேலும் இரு மீனவர்களின் கைப்பேசிகளும் தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் முடங்கின.

“தங்கள் படகில் எரிபொருள் தீர்ந்து, அலைகளால் படகு மூழ்கியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து, அருகே உள்ள நிலத்திற்கு நீந்தி வந்ததால் உயிர் பிழைத்தனர்,” என்று நேற்று இரவு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புலாவ் தியோமானின் உள்ள டெகெக் ஹெல்த் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :