NATIONAL

நான்கு ஆடவர்கள் கைது- ஒரு கோடி வெள்ளி மதிப்புள்ள கடத்தல் சிகிரெட் பறிமுதல்

கோலாலம்பூர், ஜன 19– சுங்கை பூலோ, புக்கிட் ரஹ்மான் புத்ராவிலுள்ள
கிடங்கு ஒன்றிலிருந்து 1 கோடியே 864 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 143,950
கார்ட்டன் வரி விதிக்கப்படாத சிகிரெட்டுகளை போலீசார்
கைப்பற்றியுள்ளனர்.

சுங்கை பூலோ மாவட்ட போலீசார் நேற்று பிற்பகல் 12.15 மணியளவில்
மேற்கொண்ட இந்த சோதனையில் 23 முதல் 30 வயது வரையிலான
நான்கு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில
இடைக்காலப் போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவை கூறினார்.

இந்த சோதனையின் போது சுங்க வரி செலுத்தப்படாத 122,750 கார்ட்டன
லா பிளேக் ரக சிகிரெட்டுகளும் 21,20 கார்ட்டன் லா லைட் ரக
சிகிரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், ஒரு மைவி கார் மற்றும்
மிட்சுபிஸி, டாட்சன் ரக லோரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன என்று
அவர் தெரிவித்தார்.

அந்த சிகிரெட்டுகள் அக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த
வேளையில் சமூக ஊடகங்கள் வாயிலாக வணிகர்களிடமிருந்து
கிடைக்கும் ஆர்டரின் அடிப்படையில் அவை கடைகளுக்கு
விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த சிகிரெட்டை விநியோகித்தவர்களை கண்டு பிடிப்பதில் மலேசிய
சுங்கத் துறையின் ஒத்துழைப்பை நாங்கள் நாடியுள்ளதாகக் கூறிய அவர்,
அத்துறையினர் மூலம் அந்த சிகிரெட்டுகளின் வரிக்கு பிந்தைய மதிப்பு
கண்டறியப்படும் என்றார்.


Pengarang :