SELANGOR

இந்திய சமூகத்திற்கு உதவிகள் தொடரும்- ரவாங் பொங்கல் விழாவில் கணபதிராவ் உறுதி

ரவாங், ஜன 23- இந்திய சமூகத்திற்கான சிலாங்கூர் மாநில அரசின்
உதவிகள் தொடரும் என்று சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.கணபதிராவ் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும்  50 லட்சம் வெள்ளி,  ஆலயங்களுக்கான 18 லட்சம் வெள்ளி நிதி,  ஏழை உயர்கல்வி மாணவர்களுக்கான 30 லட்சம் வெள்ளி உதவி நிதி,  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டணத் உதவி 10 லட்சம்  வெள்ளி,  ஐ-சீட் எனப்படும் வர்த்தக உபகரண உதவித் திட்டத்திற்கான 10 லட்சம் வெள்ளி  உள்ளிட்ட அனைத்து  திட்டங்களும் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தாம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த இந்த பத்தாண்டு காலத்தில் 19 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் பெற்றுத் தந்துள்ளதோடு 200க்கும் மேற்பட்ட  ஆலயங்களுக்கு  நிலப்பட்டா கிடைப்பதற்கும்  உதவியுள்ளதாக கணபதிராவ் மேலும் சொன்னார்.

நேற்று முன்தினம் இங்குள்ள தாமான் முஹிபா, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில நிலையிலான பொங்கல் நிகழ்வுக்கு தலைமையேற்று உரை நிகழ்த்திய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆலயத் தலைவரும் இந்திய சமூகத் தலைவருமான டத்தோ சுரேஷ் ராவ்
மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோரின் மிகச்
சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் 500க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலம்பம், பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சி, சிறார்களுக்கான ஓவியம் வரையும் போட்டி, மகளிருக்கான பூத்தெடுக்கும்  போட்டி உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெற்றன.

Pengarang :