NATIONAL

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்தது, 44 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஓட்டுநர் உயிர் தப்பினர்

புத்ராஜெயா,  ஜன 23: இன்று காலை யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா (யுபிஎம்) சுங்கச்சாவடியான செர்டாங்கிலிருந்து வெளியேறும் போது சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்ததில் மொத்தம் 44 சுற்றுலாப் பயணிகள் ஒரு கணம் பதட்டத்தை எதிர் கொண்டனர்.

காலை 6.13 மணியளவில், அனைத்து பயணிகளும், ஜொகூரில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோவ் கூறினார்.

“எந்த உயிரிழப்பும் இல்லை, அனைத்து பயணிகளும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். சுற்றுலா பேருந்து முற்றிலும் எரிந்ததுடன், யுபிஎம் சுங்கச்சாவடியின் மேற்கூரையும் எரிந்து நாசமானது” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கிளட்ச் மிதி தவறியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

“41 வயதான பேருந்து ஓட்டுநரிடம் இருந்து தகவல் சேகரிக்கப்பட்டது. ஓட்டுநரின் கூற்றுப்படி, அவர் சுங்கச்சாவடியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கிளட்ச் பெடலை அழுத்த முயன்றார், ஆனால் அது கடினமாக இருந்தது; மேலும், பேருந்து அந்த பாதையில் தானாகவே நின்றது.

அப்போது, பேருந்தின் பின் பகுதியில் தீப்பற்றி எரிவதாக பயணி ஒருவர் கூச்சலிட்டதால், கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர், தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டார்.

ஆறு தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைக்க முயற்சித்தும் தோல்வியடைந்ததாக வான் கமருல் கூறினார்.

எவ்வாறாயினும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த செர்டாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்களால் தீ வெற்றிகரமாக அணைக்கப் பட்டது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிளாஸ் ஒரு அறிக்கையில், சம்பவத்தைத் தொடர்ந்து யுபிஎம் சந்திப்பு தற்காலிகமாக மூடப்பட்ட பின்னர் இன்று காலை 11 மணிக்கு அப்பாதையை மீண்டும் திறந்ததாக அறிவித்தது.

“சுங்கச்சாவடியில் இடதுபுறம் வெளியேறும் பாதை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இன்னும் மூடப்பட்டுள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

– பெர்னாமா


Pengarang :