NATIONAL

போதைப் பொருளுக்கு எதிரான சோதனையில் எழுவர் கைது- வெ.21 லட்சம் கஞ்சா பறிமுதல்

ஜோர்ஜ் டவுன், ஜன 23- பினாங்கு மற்றும் பேராக்கின் பல்வேறு
இடங்களில் கடந்த வியாழக்கிமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச்
சோதனையில் அரசு ஊழியர் உள்பட எழுவர் கைது செய்யப்பட்டதோடு 21
லட்சம் வெள்ளி மதிப்புள்ள 840.729 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டது.

அண்மைய சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கை
மற்றும் கிடைத்த தகவலின் பேரில் புக்கிட் அமான் மற்றும் பினாங்கு
மாநில போதைப் பொருள் தடுப்புத் துறையினர் சிறப்பு அதிரடிச்
சோதனையை நடத்தியதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ
முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

அன்றைய தினம் அதிகாலை 6.45 மணியளவில் பட்டர்வெர்த், பாகான்
ஆஜாம் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது
நடவடிக்கையில் கார் ஒன்றில் பயணம் செய்த மூன்று ஆடவர்கள் கைது
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து புக்கிட் ஜம்பு கார் நிறுத்துமிடத்தில் இருந்த கார்
ஒன்றைச் சோதனையிட்ட போலீசார் 11 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 479.729
கஞ்சாவைக் கைப்பற்றினர் என்று அவர் இங்கு நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனிடையே, மற்றொரு போலீஸ் குழு பேராக் சங்காட் ஜெரிங் டோல்
சாவடியில் கார் ஒன்றை மடக்கி அதில் பயணம் செய்த மூவரைக் கைது
செய்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாயான் பாருவில்
உள்ள கார் நிறுத்தம் ஒன்றில் இருந்த காரிலிருந்து 10 மூட்டைகளில் 361
கிலோ எடையுள்ள கஞ்சாவைக் கைப்பற்றினர் என்றார் அவர்.

இவ்விரு நடவடிக்கைகளிலும் 840.729 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாகக்
கூறிய அவர், இதன் மதிப்பு 21 லட்சம் வெள்ளி என்பதோடு 18 லட்சம்
போதைப் பித்தர்கள் இதனைப் பயன்படுத்த முடியும் என்று அவர்
சொன்னார்.


Pengarang :