NATIONAL

பெண் குழந்தையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

ஈப்போ, ஜன 25: 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் தாதி நூர் அஸ்லினா முகமட் நசீர் (41) மற்றும் இல்லத்தரசி டி முருகம்மாள் (52) ஆவர். அந்த இருவரும் நீதிபதி நோராஷிமா காலிட் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

கெடாவின் அலோர் ஸ்டாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியராக இருக்கும் நூர் அஸ்லினா மற்றும் பினாங்கில் வசிக்கும் முருகம்மாள் ஆகியோர் ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை கடத்த முயற்சித்ததாகச் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஜூன் 18, 2020 அன்று மதியம் 12 மணியளவில் பேராக், மன்சோங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இக்குற்றம் செயல்படுத்தப்பட்டது.

நபர் கடத்தல் தடுப்பு மற்றும் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 இன் பிரிவு 14 இன் கீழ் இந்த குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் தண்டனைச் சட்டப் பிரிவு 34 இன் கீழ் ஒன்றாகப் படிக்கப்பட்டது. இது ஆயுள் சிறைத் தண்டனை அல்லது குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் பிரம்பு அடி வழங்கப்படலாம்.

பிரதி அரசு வக்கீல் எவாஞ்சலின் சைமன் சில்வராஜ் ரிங்கிட் 15,000 ஜாமீன் வழங்க முன்வந்தார். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமட் பிர்தௌஸ் முகமட் ஃபாரூக் ஐந்து குழந்தைகளுக்குத் தாயான நூர் அஸ்லினா மற்றும் வேலையில்லாமல் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முருகம்மாள் ஆகியோருக்குக் குறைந்த ஜாமீன் கேட்டார். நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் RM10,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது மற்றும் வழக்கை மீண்டும் வீசாரிப்பதற்குப் பிப்ரவரி 24 தேதியை நிர்ணயித்தது.

– பெர்னாமா


Pengarang :