SELANGOR

நிபந்தனை தளர்வு- வர்த்தக உபகரண விண்ணப்பங்கள் இவ்வாண்டு அதிகரிக்கும்- கணபதிராவ் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 25- வறுமை ஒழிப்பு பெருந்திட்ட (புளுபிரிண்ட்)
விண்ணப்பத்திற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதால்
அத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை இவ்வாண்டில்
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக பொருளாதார மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

கடந்தாண்டில் 5,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இயந்திரங்கள்
அல்லது உபகரணங்களின் மதிப்பு இவ்வாண்டில் 10,000 வெள்ளியாக
அதிகரிக்கப்பட்டுள்ளதோடு விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பும்
21ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டு தொடங்கி மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவான வருமானம்
பெறும் அங்காடி வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சொந்த தொழில்
செய்வோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். முன்பு இந்த சம்பள
வரம்பு 1,500 வெள்ளியாக மட்டும் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு இறுதியில் பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதி
உள்ள விண்ணப்பதாரரை தேர்ந்தெடுப்பதற்காக அனைத்து மாவட்ட நில
அலுவலகங்களுடன் தமது தரப்பு அடுத்த மாதம் சந்திப்பு நடத்தும் என்று
அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 20 லட்சம் வெள்ளியாக
தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்ட போதிலும் இத்திட்டத்திற்கு தகுதி
உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் விண்ணப்ப
முறையை மேம்படுத்தியுள்ளோம் என்று சிலாங்கூர் கினியிடம் அவர்
சொன்னார்.

இந்த திட்டத்திற்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கோப்ராசி
வர்கா ஹிஜ்ரா (கோஹிஜ்ரா) மூலம் வழங்கப்படும் என்றும் அவர்
கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு உதவும் பொருட்டு
வறுமை ஒழிப்பு புளுபிரிண்ட் திட்டத்திற்காக மாநில அரசு கடநதாண்டு 20
லட்சம் வெள்ளியை ஒதுக்கியது.


Pengarang :