NATIONAL

சிறார்களுக்கான விளையாட்டுப் பொருள் வடிவில் மின் சிகிரெட்- சுகாதார அமைச்சு கவலை

கோலாலம்பூர், ஜன 25- புகைப்பதன் அபாயம் குறித்த கல்வியைச்
சமூகத்தின் மத்தியில் பரப்புவதற்கான நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்துவதற்குக் கல்வியமைச்சு, உயர்கல்வியமைச்சு, பொது மற்றும்
தனியார் உயர்கல்விக் கூடங்களுடன் சுகாதார அமைச்சு ஒத்துழைப்பை
அதிகரிக்கும்.

அண்மையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைப் போல் வேப் எனப்படும்
மின் சிகிரெட்டுகள் பள்ளிகளின் எதிரே விற்கப்படுவது குறித்து தாங்கள்
மிகுந்த கவலை கொள்வதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா
முஸ்தாபா கூறினார்.

சிறார்களுக்கான விளையாட்டு சாதனங்களின் வடிவிலான டைகர் போட்
எனப்படும் மின்னியல் சிகிரெட் தொடர்பான விளம்பரங்கள், தகவல்கள்
மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அமைச்சின்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நிக்கோடின் திரவம் அடங்கிய மின் சிகிரெட்டுகளின் விற்பனை 1952ஆம்
ஆண்டு விஷப் பொருள் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்
அதன் பால் சிறார்கள் மற்றும் இளையோர்களை ஈர்ப்பதற்காக
அப்பொருள்கள் விளையாட்டு சாதனங்களைப் போல் வடிவமைக்கப்படுவது
அச்சமூட்டுவதாக உள்ளது என்றார் அவர்.

மின் சிகிரெட் திரவங்களை விளம்பரப்படுத்துவதற்கும் விற்பனை
ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1952ஆம் ஆண்டு
விஷப் பொருள் சட்டத்தில் எந்தவொரு ஷரத்தும் இல்லாததைக் கருத்தில்
கொண்டு புகையிலை மீதான சட்ட மசோதாவில் இந்த அம்சம்
சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :