SELANGOR

தாமான் ஆலம் பெர்டானா குடியிருப்பு பகுதியில் வேலி அமைக்க எம்.பி.ஐ. வெ.113,165 நிதியுதவி

கோல சிலாங்கூர், ஜன 30- ஆலம் பெர்டானா குடியிருப்பாளர் சங்கத்திற்கு
எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு 113,165
வெள்ளியை வழங்கியுள்ளது.

அந்த குடியிருப்பு பகுதியில் வேலி அமைக்கும் நோக்கத்திற்காக இந்த
நிதியை வழங்க 2018ஆம் ஆண்டில் அப்போதைய மந்திரி புசார் ஒப்புதல்
அளித்திருந்ததாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத்தலைவர்
அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே
ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. எனினும், இந்நிதியை ஒப்படைப்பதில்
சில நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டு விட்டன என்று அவர் சொன்னார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டது. நான் பழைய கோப்புகளை ஆய்வு செய்தேன். அதனைத்
தொடர்ந்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து
இத்திட்டத்திற்கு புதிதாக ஒப்புதல் பெறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அந்த நிதியுதவிக்கான மாதிரி காசோலையை ஆலம்
பெர்டானா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் ஹுசேனி சைமோனிடம்
அகமது அஸ்ரி வழங்கினார். கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகம்து அப்போது உடனிருந்தார்.

இந்த வேலியை அமைப்பதன் மூலம் அந்த குடியிருப்பு பகுதியில் நிலவும்
தெரு நாய்களின் தொல்லை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க
முடியும் என்று ஹுசேனி தெரிவித்தார்.

அந்த குடியிருப்பு பகுதியில் வேலி அமைப்பதன் மூலம் அங்கு வசித்து
வரும் சுமார் 600 குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :