NATIONAL

கடந்தாண்டில் 10 விழுக்காட்டு நிறுவனங்கள் எஸ்.எஸ்.டி. வரியைச் செலுத்தவில்லை

புத்ராஜெயா, ஜன 30- நாட்டிலுள்ள 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட
நிறுவனங்கள் விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி.) வரியை
கடந்தாண்டில் செலுத்தியுள்ளன.

இந்த வரியைச் செலுத்தத் தவறிய எஞ்சிய 10 விழுக்காட்டு
நிறுவனங்களால் நாட்டிற்கு 15 கோடி வெள்ளி வருமான இழப்பு
ஏற்பட்டதாக அரச மலேசிய சுங்கத் துறை கூறியது.

பல நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றத்
தவறியது சுங்கத் துறையின் பின்பற்றல் மற்றும் தணிக்கை துறை
மேற்கொண்ட சோதனைகளின் வழி தெரிய வந்துள்ளது என்று
அத்துறையின் அமலாக்க மற்றும் பின்பற்றல் பிரிவின் துணைத் தலைமை
இயக்குநர் டத்தோ ச சாலி முகமது கூறினார்.

வரியைச் செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் வாரிய
உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுப்பதும் இதில் அடங்கும்
என்றும் அவர் சொன்னார்.

அவர்கள் வரி பாக்கி வைத்திருக்கும் பட்சத்தில் நிலுவையில் இருக்கும்
வரித் தொகையை விட அதிகமாக அபராதம் செலுத்த வேண்டி வரும்.
அல்லது நீதிமன்ற நடவடிக்கையை எதிர் நோக்க நேரும் என்று அவர்
தெரவித்தார்.

இந்த எஸ்.எஸ்.டி. வரியைச் செலுத்தாத நிறுவனங்களின் எண்ணிக்கை 10
விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த போதிலும் அதன் விளைவாக நாடு
நிதி ரீதியாக விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்றார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் 1,103 கோடி வெள்ளி எஸ்.எஸ்.டி. வரியாக
வசூலிக்கப்பட்ட வேளையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் அந்த தொகை
25.97 விழுக்காடு அதிகரித்து 5,354 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளது
என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :