NATIONAL

பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு சிங்கை சென்று சேர்ந்தார்

சிங்கப்பூர், ஜன 30- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ
வருகை மேற்கொண்டு இன்று காலை சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.

பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு அன்வார் மேற்கொள்ளும் மூன்றாவது
அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

பிரதமர், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான்
இஸ்மாயில் மற்றும் பிரமுகர்கள் பயணம் செய்த விமானம் இன்று காலை
9.30 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முக்கியப்
பிரமுகர்களுக்கான முனையத்தை வந்தடைந்தது.

பிரதமர் தலைமையிலான பேராளர் குழுவை சிங்கப்பூர் வெளியுறவு
அமைச்சர டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் மலேசியாவுக்கான
சிங்கப்பூர் தூதர் வேணுகோபால மேனன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த ஒரு நாள் பயணத்தில் பிரதமர் இடைவிடாத நிகழ்ச்சி நிரலைக்
கொண்டுள்ளார். முதல் நிகழ்வாக அவர் இஸ்தானாவில் நடைபெறும்
சிறப்பு வரவேற்பில் கலந்து கொள்வார்.

அதன் பின்னர் சிங்கப்பூர் அதிபர் ஹலிமாக யாக்கோப்பை மரியாதை
நிமித்தம் சந்திக்கும் அன்வார், சிங்கைப் பிரதமர் லீ ஸியேன் லுங்குடனான
பேச்சு வார்த்தையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய
விருந்திலும் பங்கேற்பார்.

பின்னர் இரு நாட்டும் தலைவர்களும் ஒப்பந்தம் கையெழுத்திடும்
சடங்கைப் பார்வையிடுவர். இந்நிகழ்வைத் தொடர்ந்து சிங்கையில்
வசிக்கும் மலேசியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்பார்.


Pengarang :