SELANGOR

ரமலான் மாதத்தில் மலிவு விற்பனை தொடர்ந்து நடத்தப்படவேண்டும்- மேரு தொகுதி உறுப்பினர் கோரிக்கை

கிள்ளான், பிப் 2- அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் குறைவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டம் ரமலான் மாதத்திலும் தொடரப்பட வேண்டும் என்று மேரு சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலாய் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த மலிவு விற்பனையை நடத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க முடியும் என்று முகமது ஃபக்ருள்ராஸி மொக்தார் கூறினார்.

ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநில அரசு அதிகளவிலான மலிவு விற்பனைகளைக் குறிப்பாக மலாய்க்காரர்கள் அதிகம் வசிக்கும் மேரு தொகுதியில் மாநில அரசு நடத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மற்ற மாதங்களை விட ரமலான் மாதத்தில்தான் உணவுக்காக அதிகம் செலவிடப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த மலிவு விற்பனைத் திட்டம் தொடரப்பட்டு மேலும் விரிவாக்கம் கண்டால் அதிகமானோர் பயனடைவதற்கு வாய்ப்பு உள்ளது.

ரமலான் மாதத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற மேரு சட்டமன்றத் தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது அவர் இதனைக் கூறினார். சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனை இயக்கம் தினசரி 11 இடங்கள் என்ற அடிப்படையில் வரும் மார்ச் மாதம் வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

கடந்த முறை நடத்தப்பட்ட மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 693 இடங்களில் நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையின் வழி சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்தனர்.


Pengarang :