SELANGOR

இந்தியச் சமூகத்தின் குடியுரிமைப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்-சுங்கை பூலோ எம்.பி. ரமணன் உறுதி

சுங்கை பூலோ, பிப் 2- இந்தியச் சமூகம் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் சிவப்பு அடையாளக் கார்டு பிரச்சனையைத் தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாகச் சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

மூத்த குடிமக்கள் பலர் வசம் உள்ள தற்காலிகக் குடியுரிமையை நிரந்தர குடியுரிமையாக மாற்றுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சிவப்பு அடையாள அட்டையுடன் நிரந்தர வசிப்பிடத் தகுதியைக் கொண்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் முழு குடியுரிமை அந்தஸ்தை வழங்கும் நீல நிற அடையாள அட்டைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனர்.

நெடுங்காலமாக இருந்து வருகின்ற இந்த சிவப்பு அடையாள அட்டை விவகாரத்திற்கு உரிய தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டியுள்ளது. ஆதலால் இவ்விவகாரத்தை மக்களவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்ல நான் எண்ணம் கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஷா ஆலமில் நடைபெற்ற இந்திய சமூகத்தினருடனான சிறப்பு சந்திப்பின் போது இந்த சிவப்பு அடையாள அட்டைப் பிரச்சனையைக் கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் நான் எழுப்பினேன். இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் வாக்குறுதியளித்திருந்தார் என்று ரமணன்
கூறினார்.

சுங்கை பூலோ தொகுதி நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இங்குள்ள புக்கிட் ரஹ்மான் புத்ராவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ரமணன் இதனைக் கூறினார்.

புதிய விடியலை எதிர்பார்த்து பொங்கலை நாம் கொண்டாடுகிறோம். மக்கள் பிரதிநிதி என்ற முறையில் என்னால் முடிந்த உதவிகள் மற்றும் அனுகூலங்களை மக்களுக்குச் செய்திட உறுதி கொண்டுள்ளேன் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :