NATIONAL

பிரதமருடன் கேள்வி-பதில் அங்கம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அமல்படுத்தப்படும்

கோலாலம்பூர், பிப் 8- பிரதமருடன் கேள்வி-பதில் என்ற புதிய அங்கம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கும் 15வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.

தொடக்கக் கட்டமாக இந்த அங்கம் பரீட்சார்த்த முறையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் கூறினார்.

தம்மிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதிலளிப்பதற்குப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அமைச்சர்களுக்கான இதேபோன்ற கேள்வி- பதில் நிகழ்வு வியாழக்கிழமைகளில் நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

நாம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்றாகும். எனினும், இதனை நிரந்தர நிகழ்வாக நடத்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த அமலாக்கத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்காக இதனைப் பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

இந்த பிரதமருடனான கேள்வி-பதில் அங்கத்தை நிரந்தர நிகழ்வாக ஆக்குவதாக இருந்தால் அதற்காக மக்களவைக் கூட்ட விதிகளில் திருத்தம் செய்து அதனை அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :