NATIONAL

டிங்கி சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ள பள்ளிகளில் உடனடி நடவடிக்கை அவசியம்

கோலாலம்பூர், பிப் 8: டிங்கி சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ள பள்ளிகளில் கொசுக்கள் பெருகுவதைக் கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிகள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ளத் துப்புரவு ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பள்ளி விடுமுறை தொடங்குகிறது. இடம் பற்றாக்குறையால் சில இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இணையம் வழி வகுப்பு நடைபெற உள்ளது, காரணம் வகுப்புகள் எஸ்பிஎம் தேர்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

கழிவறை பம்புகள், தண்ணீர் தொட்டிகள், அலங்காரக் குளங்கள் ஆகியவற்றில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதும், குவளைகள், குப்பைத் தொட்டிகள், வாட்டர் ஃபில்டர் இயந்திரங்கள் ஆகியவற்றின் அடிவாரத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் ஹிஷாம்.

“பழையப் பொருட்களையும் மற்றும் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய கொள்கலன் களையும் விவேகமான முறையில் அப்புறப்படுத்துங்கள். மேலும், எஸ்பிஎம் தேர்வு தொடங்கும் முன் அல்லது அதற்கு முதல் நாள் ஏரோசலை ஸ்ப்ரே செய்யவும்.

இதற்கிடையில், டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில், இந்த ஆண்டு ஐந்தாவது தொற்றுநோய் வாரத்தில் (ME5) பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.  2,159 சம்பவங்கள் பதிவாகியுள்ள வேளையில் இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

– பெர்னாமா


Pengarang :