SELANGOR

பொழுதுபோக்கு முகாம் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய உலு சிலாங்கூர் வட்டார உரிமையாளர்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், பிப் 8- உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பொழுதுபோக்கு முகாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தங்களின் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏதுவாக அதனைப் பதிவு செய்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கான விண்ணப்பப் பாரங்களைக் கியூஆர் குயீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக அல்லது என்ற இணைப்பின் மூலம் பூர்த்தி செய்யலாம் என்று உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கூறியது.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு 03-60641331 இணைப்பு 123 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாக உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் நகர திட்டமிடல் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக பிப்ரவரி முதல் தேதி தொடங்கி சிலாங்கூரிலுள்ள அனைத்து பொழுதுபோக்கு முகாம் நடத்துநர்களும் தங்களின் வர்த்தக நடவடிக்கையை ஊராட்சி மன்றங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாநில அரசு கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்திருந்தது.

பொழுதுபோக்கு முகாம் நடத்தும் இடத்தின் சூழலைப் பொறுத்து பொதுவான அனுமதி வழங்கப்படும் வேளையில் இத்தகைய முகாம்களை நடத்துவோர் சொந்த நிலங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது லைசென்ஸ் விண்ணப்பத்திற்கான கட்டாய நிபந்தனையாக விதிக்கப்படுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறியிருந்தார்.

கடந்தாண்டு இறுதியில் பத்தாங் காலி-கெந்திங் சாலையில் உள்ள ஃபாதர்‘ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பொழுது போக்கு மையத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிரான கடுமையான விதிமுறைகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த பேரிடரில் 31 பேர் உயிரிழந்த வேளையில் மேலும் 61 பேர் உயிர்த்தப்பினர்.


Pengarang :