NATIONAL

தற்காலிக வருகை அனுமதியை வழங்கும் அதிகாரம் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இல்லை- குடிநுழைவுத்துறை

கோலாலம்பூர், பிப் 8- மலேசியாவில் தங்கள் நாட்டு பிரஜைகள் தற்காலிக அடிப்படையில் தங்குவதற்கு ஏதுவாக எந்த விதமான அனுமதி அட்டையையும் வழங்கும் அதிகாரம் இங்குள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இல்லை என்று குடிநுழைவுத்துறை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

வெளிநாட்டினர் இங்கு தங்குவதற்கும் வேலை செய்வதற்குமான அனுமதி அட்டை அல்லது விசாவை வழங்கும் அதிகாரம் குடிநுழைவுத் துறைக்கு மட்டுமே உள்ளது என்று அதன் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ட்சைமி டாவுட் கூறினார்.

இந்த நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டத் திட்டங்களில் தலையிடும் உரிமை எந்த வெளித் தரப்பினருக்கும் கிடையாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறோம் என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

“நீலாய் ஸ்ப்ரிங்கில் உள்ள அந்நிய நாட்டினர் குடியிருப்பு சட்ட விரோதமானது அல்ல“ என்ற தலைப்பிலான மைகிரண்ட் கேர் எனும் அமைப்பின் அறிக்கை தொடர்பில்  அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

நீலாயில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பிடிப்பட்ட வெளி நாட்டினர் அனைவரும் ஓராண்டிற்கு மேல் இந்நாட்டில் தங்குவதற்கான அனுமதியை இந்தோனேசியத் தரப்பினரிடமிருந்து பெற்றுள்ளதாக ஜாகர்த்தாவைத் தளமாக கொண்ட அந்த அரசு சாரா அமைப்பு தெரிவித்திருந்தது.

இம்மாதம் 1ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் இரண்டு மாதக் குழந்தை முதல் 72 வயது முதியவர்களை உள்ளடக்கிய 67 இந்தோனேசிய நாட்டினர்  கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராதது, அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக காலம் தங்கியிருந்தது உள்பட பல்வேறு குடிநுழைவுச் சட்டங்களை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Pengarang :