SELANGOR

மார்ச் மாதத்திற்குள் 16 மலிவு விற்பனை நிகழ்வுகளை நடத்த தெராத்தாய் தொகுதி திட்டம்

அம்பாங், பிப் 9- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி வரும் மார்ச் மாதம் வரை நடைபெறவிருக்கும் மாநில அரசின் மலிவு விற்பனையின் வாயிலாகத் தெராத்தாய் தொகுதியைச் சேர்ந்த 8,000 பேர் வரை பயன் பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் தொகுதியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 16 இடங்களில் மலிவு விற்பனையை நடத்துவதற்கான பட்டியலைத் தயாரிக்கும் பணியில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து தாங்கள் மேற்கொண்டு வருவதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எலிஸ் டான் கூறினார்.

இதுவரை ஆறு மலிவு விற்பனைத் திட்டங்கள் நடத்தப்பட்டு விட்டன. எஞ்சிய 10 மலிவு விற்பனைகள் நடத்தப்படும் இடங்கங்களை தெராத்தாய் தொகுதி ஒருங்கிணைப்பு பேஸ்புக் வாயிலாகப் பொது மக்கள் அறிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனை இன்று தாமான் சாகா சூராவ் அருகே நடைபெறவுள்ளது. கோழி, முட்டை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்க விரும்புவோர் விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் இவ்விரு பொருள்களும் விரைவாக தீர்ந்து
விடுகின்றன என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பங்சாபுரி லெம்பா மாஜூவில் நடைபெற்ற தெரத்தாய் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இதனைத் தெரிவித்தார். தெராத்தாய் தொகுதியைப் பொறுத்த வரை ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைக்கு எப்போதும் ஆதரவு கிடைத்து வரும். ஆனால், இம்முறை கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொது மக்களுக்கு அது குறித்து தெரிவிக்க இயலாமல் போய்விட்டது என்று அவர் சொன்னார்.

முன்பைவிட குறைவாக அதாவது 300 பேர் மட்டுமே இந்த விற்பனையில் கலந்து கொண்ட போதிலும் கோழி, முட்டை, அரசி போன்ற பொருள்கள் முற்றாக விற்றுத் தீர்ந்து விட்டன என்று அவர் கூறினார்.


Pengarang :