SELANGOR

தெராத்தாய் தொகுதியில் இலவசப் பற்றுச் சீட்டுகளை வழங்க சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு

அம்பாங், பிப் 9- மூத்தக் குடிமக்கள் நட்புறவுத் திட்ட (எம்.எஸ்.யு.இ.) பயனாளிகளுக்கு ஜோம் ஷோப்பிங் இலவசப் பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்காகத் தெராத்தாய் சட்டமன்ற தொகுதி வரும் மார்ச் மாதம் சிறப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 150 வெள்ளிக்கான பற்றுச் சீட்டைப் பெற இத்தொகுதியைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ள போதிலும் அவர்கள் இன்னும் அதனைப் பெறவில்லை என்பதை தரவுகள் காட்டுவதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் எலிஸ் டான் கூறினார்.

இந்த நிகழ்வு யாவாஸ் எனப்படும் யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் அமைப்பின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும். நோன்புப் பெருநாள் வெகு விரைவில் கொண்டாடப்படவுள்ளதால் இந்த பற்றுச் சீட்டுகளை விரைந்து வழங்க விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜனவரி முதல் தெராத்தாய் தொகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் இந்த ஷோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்திற்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் அவர்.
இங்குள்ள பங்சாபுரி லெம்பா மாஜூவில் நேற்று நடைபெற்ற தெராத்தாய் தொகுதி நிலையிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டு அறுபது வயது பூர்த்தியடைந்து இன்னும் எம்.எஸ்.யு.இ. திட்டத்தில் பதிவு செய்யாதவர்கள் வாக்களிப்பு தொகுதியை உறுதி செய்தப் பின்னர் தெராத்தாய் தொகுதி சேவை மையத்தை அணுகும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :