ANTARABANGSA

துருக்கி நிலநடுக்கம் – மரண எண்ணிக்கை 12,391ஆக உயர்வு, 6,000 கட்டிடங்கள் இடிந்தன

வாஷிங்டன், பிப் 9- தென் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டியதாக அரசாங்கம் ஊடகங்களை மேற்கோள் காட்டி அடாடேலு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த இந்த இயற்கைப் பேரிடரில் 12,391 பேர் உயிரிழந்த வேளையில் 62,914 பேர் காயமடைந்துள்ளதாகத் துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது.

ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 7.6ஆகப் பதிவான இரு நிலநடுக்கத்தினால் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமானதாக அது மேலும் தெரிவித்தது.

நாங்கள் அனைத்து வளங்களையும் பாதிக்கப்பட்ட பகுதிக்குத் திசை திருப்பியுள்ளோம். மீட்புப் பணிகளில் பேரிடர் மேலாண்மை மன்றத்துடன் ஒத்துழைப்பை நல்கி வருகிறோம் என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் பாதிக்கப்பட்ட கஹராமான்மாராஸ் பகுதியைப் பார்வையிட்டப் பின்னர் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தினால் 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கிக்குப் போர்க்கால அடிப்படையில் உதவிகள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) கூறியது.

நியூயார்க்கில் உள்ள துருக்கி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டப் பின்னர் ஐ.நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :