SELANGOR

கோலக் கிள்ளான் தொகுதியில் 330 குடும்பங்கள் பிங்காஸ் உதவித் திட்டத்தில் பங்கேற்பு

கிள்ளான், பிப் 13- பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில நல்வாழ்வு உதவித் திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை கோலக் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த 330 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.

இதன் வழி இந்த தொகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட பிங்காஸ் உதவிக்கான கோட்டா முழுமை பெற்றுள்ள வேளையில் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மாதம் 300 வெள்ளி உதவித் தொகையைப் பெற்று வருவதாகத் தொகுதி உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட கோட்டா முழுமை பெற்று விட்ட போதிலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்காகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தினமும் தொகுதி அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர் என்று அவர் சொன்னார்.

கோலக் கிள்ளான் போன்ற சில தொகுதிகளுகளுக்கு இத்திட்டத்தின் கீழ் கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இத்தொகுதியிலுள்ள பெரும் எண்ணிக்கையிலானோர் மாதம் 1,500 முதல் 2,000 வெள்ளி வரை சம்பளம் வாங்கும் தொழிற்சாலை ஊழியர்களாகவும் கூலித் தொழிலாளிகளாகவும் உள்ளனர் என்றார் அவர்.

இங்குள்ள பூலாவ் இண்டாவில் நேற்று நடைபெற்ற கோலக் கிள்ளான் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, பிங்காஸ் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்காகத் தமது தொகுதி அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு உணவுக் கூடைகளைத் தாங்கள் வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :