SELANGOR

முதலாவது சிலாங்கூர் திட்டத்தில் மக்களுக்கு நலன் தரும் 200 திட்டங்கள்- மந்திரி புசார்

அம்பாங், பிப் 13- அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டு வடிவமைப்பாகத் திகழும் முதலாவது சிலாங்கூர் திட்டம் மக்கள் நலன் சார்ந்த 200க்கும் மேற்பட்ட திட்டங்களைக் உள்ளடக்கியுள்ளது.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட 20,000 கோடி வெள்ளிக்கும் மேல் மதிப்பிலான அத்திட்டங்கள் வட்டார மற்றும் புதிய மேம்பாட்டுப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளதோடு அதில் பொருளாதார மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த முதலாவது மலேசியத் திட்டம் எல்.ஆர்.டி. போன்ற மத்திய அரசு திட்டங்களையும் தனியார் மற்றும் பொதுத் துறை திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. இது தவிர கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்துவது கச்சா நீர் உத்தரவாதத் திட்டம் ஆகியவை இவ்வாண்டு இறுதியில் அல்லது வரும் 2024ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் என அவர் சொன்னார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் கோம்பாக் வட்டாரமும் உள்ளடங்கியுள்ளது. அடிப்படை வசதிகள், தொடர்பு வலையமைப்பு மற்றும் அகண்ட அலைவரிசயை மேம்படுத்த விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தாமான் மெலாவத்தி ரமலான் சந்தைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கேம்பாக் தொகுதி நிலையிலான சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.

கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் 21,244 கோடி வெள்ளி மதிப்பிலான முதலாவது சிலாங்கூர் திட்டம் (2021-2025) தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


Pengarang :