NATIONAL

நாட்டின் கடன் 1.5 ட்ரிலியன் வெள்ளியாக அதிகரிப்பு- மக்களையில் தகவல்

ஷா ஆலம், பிப் 14- நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் 1.5 ட்ரிலியன் வெள்ளி (1.5 லட்சம் கோடி வெள்ளி) கடன் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அரசாங்கம் நிர்வாக முறையைச் சீரமைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மோசமான நிர்வாகம் மற்றும் வீண் விரயம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் கடன் தொகை அதிகமானதற்குக் காரணமாக அமைந்தது என்று அவர் விளக்கினார்.

நிர்வாக முறை சீரமைப்பு தவிர்த்து வருமானத்தை அதிகரிப்பது மற்றும் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளில் பொதுமக்களுக்குச் சுமையளிக்காத வகையில் பொது நிதியைச் செலவிடும் வழிவகைகளை மறுஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று தைப்பிங் உறுப்பினர் வோங் கா வோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் நடப்பு கடன் 1,079.6 ட்ரிலியன் வெள்ளியாக உள்ளது. 20,590 கோடி வெள்ளி அரசாங்க உத்தரவாதக் கடப்பாடு, 1,820 கோடி வெள்ளி 1மலேசியா டெவலெப்மெண்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி.) கடன் மற்றும் 414,220 கோடி வெள்ளி இதரக் கடன்களும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

விகிதாசார அளவில் பார்த்தால் கடன் தொகையின் மதிப்பு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 விழுக்காடாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கக் கடன்களுக்கான வட்டியாக கடந்த 2022ஆம் ஆண்டில் 4,100 கோடி வெள்ளியும் 2023ஆம் ஆண்டில் 4,600 வெள்ளியும் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அன்வார் கூறினார்.


Pengarang :