ANTARABANGSA

மேலும் இரு நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு அமெரிக்கா, ஐ.நா. கூடுதல் உதவி

வாஷிங்டன், பிப் 21 – துருக்கியின் தெற்கு மாநிலமான ஹடேயில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து “கூடுதல் ஆதரவை” வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்  தெரிவித்தார்.

இந்த பிராந்தியத்தைத் தாக்கிய இரு புதிய நிலநடுக்கங்களின் தாக்கத்தை எதிர்கொள்ளும் துருக்கி மற்றும் சிரியா மக்களைப் பற்றியதாகவே எனது சிந்தனை உள்ளது என்று குடெரெஸ் ட்விட்டர் பதிவில் கூறியதாக அனடோலு ஏஜென்சி குறிப்பிட்டுள்ளது.

களத்தில் உள்ள ஐ.நா குழுக்கள் நிலைமையை மதிப்பிடுகின்றன. மேலும் தேவைக்கேற்பக் கூடுதல் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்  என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில்,  நேற்று ஏற்பட்ட புதிய நிலநடுக்கங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது. பேரிடரில் பாதிக்கப்பட்ட அந்நாட்டிற்குத் தொடர்ந்து அதன் முழு ஆதரவை வழங்கப் போவதாகவும் உறுதியளித்தது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்கனவே பேரழிவிற்கு உள்ளான பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக  வெளிவந்த  செய்தியால் நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ட்விட்டர்  பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் கடுமையான நில நடுக்கங்கள் ஏற்பட்ட  இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று  ஹத்தாய் மாகாணத்தை மேலும் இரு நிலநடுக்கங்கள் உலுக்கின.


Pengarang :