SELANGOR

நீரிழிவு காரணமாகக் காலை இழந்த ஜான்சி ராணிக்குச் செயற்கை கால்- சொக்சோ வழங்கியது

கிள்ளான், பிப் 21- நீரிழிவு நோய் காரணமாகக் கடந்தாண்டில் ஒரு காலை இழந்த குடும்ப மாதான ஆர்.ஜான்சி ராணிக்குச் சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் வாயிலாகச் செயற்கை காலும் மறுவாழ்வு சிகிச்சையும் வழங்கப்பட்டது.

இந்த உதவி கிடைக்கப்பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த 43 வயதான ஜான்சி ராணி, மீண்டும் மறு பிறப்பெடுத்தது போல் தாம் உணர்வதாகக் கூறினார்.

இதற்கு முன்னர் நான் நிர்க்கதியாக நின்றேன். இரு மாதங்களாகப் பூட்டிய அறைக்குள் இருந்தேன். யாரையும் பார்க்க விரும்பவில்லை. கடும் மன உளைச்சலுக்குள்ளான நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டேன் என்றார் அவர்.

எந்நேரமும் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் என் தாயார்தான் சக்கர நாற்காலியில் என்னைக் கொண்டுச் செல்வார். மறுபடியும் வேலைக்குச் செல்லும் ஆர்வம்கூட இல்லாமல் போய்விட்டது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று தமது இல்லத்தில் சொக்சோ உதவி உபகரண மறுவாழ்வு திட்டத்தின் கீழ் செயற்கை காலைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சர் வீ. சிவக்குமார் மற்றும் சொக்சோ நடவடிக்கைப் பிரிவின் துணைத் தலைமை அதிகாரி ஜோன் ரிபா மாரின் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

செயற்கை கால் தவிர்த்து,மலாக்காவிலுள்ள துன் அப்துல் ரசாக் மறுவாழ்வு மையத்தில் புனர்வாழ்வு சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இது தவிர, சக்கர நாற்காலி மற்றும் மறுபடியும் வேலைக்குத் திரும்பும் திட்டத்திற்கான கடிதத்தையும் அவர் பெற்றார்.


Pengarang :