SELANGOR

மலிவு விற்பனைக்குப் பதிலாகச் சாத்தியமான மாற்றுத் திட்டம்- மாநில அரசு பரிசீலனை

ஷா ஆலம், பிப் 22- மே மாதம் முடிவடைய உள்ள ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்திற்குப் பதில் சாத்தியமான மாற்று திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருகிறது.

மக்கள் சேமிக்க உதவும் திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில் அமல்படுத்துவதை 
உறுதி செய்யும் நோக்கில் முயற்சி எடுக்கப்படுவதாக விவசாயத் துறைக்கான 
ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வரும் மே மாதம் முடிவடைய இருக்கும் இந்த மலிவு விலையில் பொருட்களை விற்கும் திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்த முடியாது. அதற்கு மாற்றாக உணவுப் பொட்டல விநியோகம் போன்ற திட்டங்களை அமல்படுத்த உத்தேசித்துள்ளோம் என்று அவர் சொன்னார்.

நோன்பு மாதத்தின் போது இந்த திட்டம் தொடரப்படும். இத்திட்டத்தில் கூடுதலாகப் பொருட்களைச் சேர்க்க விரும்புகிறோம். எனினும் காலாவதி தேதியைக் கொண்ட ரொட்டி போன்றப் பொருட்களை இதில் சேர்க்க இயலாது என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது விற்பனையில் வைக்கப்படும் ஆறு பொருட்கள் போதுமானவை எனக் கருதுகிறோம். இங்கு பொருட்கள் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது இத்திட்டத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவைப் புலப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த விற்பனை தற்போது தினசரி ஒன்பது இடங்கள் என்ற ரீதியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டுக் கழகம் நடத்தும் இத்திட்டத்தின் வாயிலாக   
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இருபது 
லட்சத்துக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர்.

Pengarang :